Monday, 28 October 2013

ஒன்றுமில்லா ஒன்றே பலவாச்சு........

ஒரே பொருள் எல்லாமாக இருக்கிறதுஎன்பதுதான் அத்வைத தத்துவம், ஆனால் இதுவரை யாருமே அந்த ஒரு பொருள் எது? அது எப்படி எல்லாமாக மாறியது என்பதை விளக்கவே இல்லை.

பிரபஞ்ச பரிணாம தத்துவம் - வேதாத்திரி மகரிஷி

அண்மைக்காலத்தில் நம்காலத்திலயே வாழ்ந்த வேதாத்திரி மகரிஷி, அத்வைத தத்துவத்திற்கு ஒரு கோட்பாட்டை வெளியிட்டுள்ளார். இந்த கோட்பாடு அறிவியலாளர்களால் ஏற்றுக்கொள்ளும் படியாகவும், பிரபஞ்சத்தில் நடக்கும் எல்லா வித நிகழ்சிகளையும் விளக்க முடிந்ததாகவும் உள்ளது.

இந்த கோட்பாட்டை கொண்டு எலெக்ட்ரான்ஏன் தன்னை தானே சுற்றுகிறது என்பதையும் விளக்கலாம், உயிரினங்களில் மனம் எவ்வாறு இயங்குகின்றது என்பதையும் விளக்கலாம்.

பிரபஞ்சம் ஏன் விரிந்து கொண்டே செல்கிறது என்பதையும் விளக்கலாம், ஒருவரின் மனதில் எழும் எண்ண அலைகள் எப்படி அடுத்தவரின் மனதில் பிரதிபலிக்கிறது என்பதையும் விளக்கலாம்.


 பஞ்ச பூத தத்துவம்:
 
வேதாத்திரி மகரிஷி அவரது ஆராய்ச்சியை பஞ்ச பூத தத்துவத்தில் இருந்தே தொடங்கினார். ஆகையால் நாமும் இந்த கட்டுரையை அங்கிருந்தே தொடங்குவோம்.

 நம் முன்னோர்கள் இந்த பிரபஞ்சத்தை 5 பௌதிக பிரிவுகளாக பிரித்தனர். அவை

1.       விண் துகள் (அல்லது) பரமாணு (அல்லது) ஆகாசம் (infinitesimal energy particle).

2.       காற்று (air)

3.       அழுத்தக் காற்று (அல்லது) நெருப்பு (heavy air or fire)

4.       நீர் (liquid)

5.       கெட்டிபொருள் (solid)


இந்த 5 பூதங்களுக்கும் மூலமாக இருப்பது எது?

இந்த பிரபஞ்சத்தில் எந்த ஒரு பொருளை எடுத்து, அதன் மூலகங்களை ஒவ்வொன்றாக பிறித்துக் கொண்டே  வந்தால், கடைசியில் மிஞ்சுவது என்ன?  அணு  என்ற நிலைக்குத்தான் வருவோம். அதாவது பரமாணு என்ற நிலைக்கு வருவோம். 

அணு என்றால் சிறிய என்று பொருள், பரம அணு என்றால் அதை விட ஒரு சிறிய பொருள் இந்த பிரபஞ்சத்தில் கிடையாது என்று பொருள். ஆக இந்த பிரபஞ்சத்தில் நாம் காணும் எந்த ஒரு பொருளும் பரமாணுக்களின் (விண்ணின்) கூட்டு சேர்க்கையே என்பதுதான் பஞ்சபூத தத்துவத்தின் கருப்பொருள்.

இதை நவீன அறிவியலும் ஒப்புக் கொள்கிறது (mass is an association of energy particles). ஆக விண் என்ற துகளே (பரமாணு) மற்ற நான்கு பூதங்களுக்கும் மூலப்பொருளாக உள்ளது என்பது தெளிவாகிறது.

 
பரமாணு எங்கிருந்து வந்தது?
 
இது பற்றிய ஆராய்ச்சியை மகரிஷி அவர்கள் தொடங்கும் பொழுது, அவருக்கு முதலில் அடிபட்ட கேள்வி இதுதான். இந்த பிரபஞ்சத்தில் விண், விண்ணின் கூட்டு சேர்கை, இதைத் தவிர வேறு என்ன உள்ளது? இந்த விண் என்ற நிகழ்ச்சி எங்கே நடைபெறுகிறது?  இந்த கேள்விக்கு விடையாய் வந்தது சுத்தவெளி (Absolute SPACE) அல்லது வெட்டவெளி.

இரண்டு பரம அணுக்களுக்கு (விண் துகள்களுக்கு) இடையில் என்ன இருக்கிறது, சுத்தவெளிதான் உள்ளது. அப்படி என்றால் இந்த விண் என்ற பூதம் சுத்தவெளியில் இருந்துதான் வந்திருக்குமோ! ஆனால் சுத்தவெளி ஒரு வெற்றிடம்தானே, அதில் இருந்து எப்படி அணு பிறக்க முடியும் என்று சிந்தித்த பொழுது அவருக்கு அடிபட்ட அடுத்த கேள்வி, சுத்தவெளி ஒரு வெற்றிடம் என்று எதை வைத்து முடிவு செய்தோம்? சுத்தவெளி உண்மையில் ஒரு ஏதுமற்ற வெற்றிடமா?


சுத்தவெளியே ஒரு வெற்றிடமா?
 
விண் மற்றும் விண்ணின் கூட்டு இயக்கங்களான மற்ற பூதங்களும் சுத்தவெளியில்தான் மிதந்து கொண்டு இயங்குகிறது. விண்ணின் கூட்டு சேர்கையால் உருவான பூமி, சூரியன் மற்றும் அதை சுற்றிலும் உள்ள மிகப் பெரிய நட்சத்திரங்கள் அனைத்தும் இந்த சுத்தவெளியில் தான் மிதக்கிறது.


இந்த பிரபஞ்சம் முழுவதையும் தன்னில் தாங்கிக்கொண்டும் மிதக்க விட்டுக்கொண்டும் இருக்கும் இந்த சுத்தவெளி எப்படி ஒரு சாதாரண வெற்றிடமாக இருக்க முடியும்?

முடியாது, இது ஒரு எல்லாம்வல்ல, பிரபஞ்சத்தில் உள்ள எல்லா பொருட்களையும் விட சக்தி வாய்ந்த ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்.

அது மட்டும் அல்லாமல், இந்த சுத்தவெளி மட்டும்தான் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது, இந்த பிரபஞ்சத்தில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் (சிறிய விண் துகள் முதல் பெரிய நட்சத்திரங்கள் வரை) அதற்க்கு இடமாக இருப்பது இந்த சுத்தவெளிதான்.

இந்த ஆராய்ச்சியை நீங்களும் உங்கள் மனதினால் செய்யலாம். உங்களை சுற்றி இருக்கும் பொருள் மற்றும் நிகழ்ச்சியை ஒவ்வொன்றாக மனதை கொண்டு நீக்குங்கள், உங்களை சுற்றயுள்ள வீடு, மக்கள், உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருள்கள், ஊர், நாடு, பூமி, கோள்கள், சூரியன், நட்சத்திரம் என்று அனைத்தையும் நீக்குங்கள், கடைசியில் உங்களையும் நீக்குங்கள் ...... மீதம் என்ன இருக்கும், ஒரு எல்லையற்ற இருட்டான இடம் தான் மீதம் இருக்கும், இந்த இடத்தை உங்களால் அங்கிருந்து நீக்க முடியுமா,  நீக்கினாலும் அங்கே மீதம் இருப்பது அதே இருட்டான இடம் தான் (சுத்தவெளி).  

 எந்த ஒன்று எல்லா இடங்களிலும் இருக்கிறதோ அதுவே இந்த பிரபஞ்சத்தில் உள்ள எல்லா இயக்கங்களிலும் பங்கு கொண்டு அந்த இயக்கத்தை ஒழுங்குபடுத்தவும் கண்காணிக்கவும் முடியும். ஆக எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்து, அணைத்து பொருள்களிலும் நிகழ்சிகளிலும் ஊடுருவி நிறைந்து இருப்பது இந்த சுத்தவெளி என்கின்ற எல்லாம் வல்ல எல்லையற்ற இருட்டான இடம் தான்.  

 அது மட்டும் இல்லாமல், விண் என்பது ஒரு இயக்கம், சுத்தவெளி என்பது ஒரு இயக்கமற்ற நிலை, ஒரு இயக்கத்தின் பிறப்பிடம் இயக்கமற்ற நிலையிலிருந்து தான் வந்திருக்கவேண்டும். ஆகையால் விண் என்ற பூதம் சுத்தவெளியில் இருந்துதான் வந்திருக்க வேண்டும் என்ற முடிவிற்கு வந்தார்.


 இவருடைய ஆராய்ச்சி இதோடு நிற்க வில்லை, எப்படி இந்த சுத்தவெளி விண்ணாக மாறியது? என்ற கேள்வியில் பல நாட்கள் சிந்தனை செய்துள்ளார். அவரின் ஆராய்சிக்கு பெரிதும் துணையாக இருந்தது மன அலைச்சுழலை குறைத்து மனதை நுண்ணிய நிலையில் இயங்கவைக்கும் குண்டலினி தியானமும், நம் சித்தர்களின் பாடல்களும் மற்றும் ஆழ்ந்த ஆராய்ச்சியும் தான். இதன் விளைவாக பிரபஞ்ச பரிணாம கோட்பாட்டைபின்வருமாறு உலகுக்கு அளித்தார்.
 

 சுத்தவெளியே மெய்ப்பொருள்:

சுத்தவெளி (Absolute SPACE) ஒரு வெற்றிடம் இல்லை, அதுவே எல்லாம்வல்ல, பிரபஞ்சத்தில் உள்ள எல்லாவற்றையும் விட சக்தி வாய்ந்த ஒரு பொருள். அதன் இயல்பான ஆற்றல் தன்னிறுக்கம்அது எப்பொழுதும் தன்னைத் தானே இறுக்கிக் கொள்ளும் தன்மையுடையது. இந்த இறுக்கம் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் குவியும் பொழுது, அந்த புள்ளியில் இறுக்கம் அதிகரித்து, ஒரு கட்டத்தில் அதை மேலும் இருக்க முடியாத நிலை வரும் பொழுது, சுத்தவெளி அந்த புள்ளியை மையமாகக்கொண்டு சுழலத் தொடங்குகிறது.

அதாவது ஒரு புள்ளியில் குவிந்து கொண்டே இருக்கும் ஆற்றல் மேலும் அந்த புள்ளியில் குவிய முடியாமல், பிதுங்கி தன் திசையை மாற்றி, அந்த புள்ளியில் இருந்து வழிந்து, திரும்பி செல்கிறது. திரும்பிய ஆற்றல் நேராக செல்ல முடியுமா? முடியாது, ஏனென்றால் சுத்தவெளியிலிருந்து சூழ்ந்தழுத்தும் ஆற்றல் வந்து கொண்டே இருக்கிறது. ஆகையால் வழிந்து வரும் அந்த ஆற்றல் சுழன்று சுழன்று வெளியே செல்கிறது. ஆகையால் அந்த இடம் சுழலத் தொடங்குகிறது.

 உதாரணம்: ஒரு கால் பந்தை எடுத்துக்கொள்வோம், அது நிலையாக ஒரு இடத்தில் இருக்கிறது, ஒரு குழாயின் மூலம் தண்ணீரை வேகமாக இந்த பந்தின் எதாவது ஒரு பக்கத்தில் செலுத்தினால் என்ன ஆகும்? பந்து தண்ணீர் வந்த திசையிலயே உருண்டு செல்லும். இப்பொழுது, அதே பந்தை எல்லா திசைகளிலும் ஒரே அளவு விசையுள்ள தண்ணீரை கொண்டு தாக்கினால் என்ன ஆகும்? பந்து, அந்த இடத்திலயே சுழல ஆரம்பித்துவிடும். இதே தான் சுத்தவேளியிலும் நடக்கிறது.

சரி, சுத்தவெளி சுழல ஆரம்பித்து விட்டது, அடுத்த கட்டம் என்ன? 

தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் சூழ்ந்தழுத்த ஆற்றல் அந்த சுழலையை மிக மிக சிறிய அளவிற்கு இறுக்கி ஒரு நுண்ணிய சுழலையாக மாற்றுகிறது. இந்த நுண்ணிய அதி வேக தற்சுழற்சி கொண்ட சுழலையே விண் துகள் (அல்லது) பரமாணு என்று மதிக்கப்படுகிறது.

 இதே பரமாணு உயிர்களிடத்தில் உயிராகவும் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த ஒரு துகளைத்தான் நவீன அறிவியலாளர்கள் “GOD particle” என்று பெயர் வைத்து தேடிக்கொண்டு இருக்கின்றனர். ஆனால் இந்த பரமாணு எந்த ஒரு அறிவியல் கருவிக்கும் அகப்படாது, அதற்க்கான விளக்கத்தை முன்னரே ஒரு கட்டுரையில் பதிவு செய்துள்ளேன்.
http://ilamsblg.blogspot.sg/





இறுக்க ஆற்றலிலிருந்து தள்ளும் ஆற்றல்:
 
சுத்தவெளி தொடர்ந்து தன்னை இறுக்கிக்கொண்டே இருக்கிறது, இது வரை ஒரு புள்ளியில் குவிந்த ஆற்றல் முழுவதும் இறுகி குறுகி நுண்ணிய தற்சுழற்சி விரைவு கொண்ட விண் துகளாக மாறிவிட்டது, இதற்கு மேலும் வந்து கொண்டே இருக்கும் அந்த இருக்க ஆற்றல் சுழலும் விண் மீது ஒரு உரசலை ஏற்படுத்துகிறது, ஒரு கத்தியை சாணம் பிடிக்கும் பொழுது கோடானு கோடி நெருப்பலைகள் உருவாவது போல், விண் துகளுக்கும் சுத்தவேளிக்கும் ஏற்படும் உரசலினால் கோடானு கோடி விரிவலைகள் சுழலும் விண் துகளிலிருந்து பிறந்து விரிந்து சுத்தவெளியில் கலக்கிறது.

 விண்ணின் சுழற்சியால் எப்பொழுதும் வந்து கொண்டே இருக்கும் இந்த விரிவலைகள் தள்ளும் சக்தியாக இயங்குகிறது, மற்றொரு விண் துகளை தன் அருகே சேர்க்காமல் தள்ளிநிறுத்துகிறது. சுத்தவெளியின் இருக்க ஆற்றலே தள்ளும் சக்தியாகவும் பரிணமித்துள்ளது. (ஒன்றே பலவாச்சு).








எலெக்ட்ரான்(Electron), ப்ரோடான் (Proton), நியூட்ரோன் (Neutron) எப்படி வந்தது ?

தொடக்கத்தில் விண் துகள்கள் அதிவேக தற்சுழற்சி உடையது, தன் சுழற்சியினால் விளையும் தள்ளும் விசை மற்ற விண் துகள்களை நெருங்க விடாமல் செய்கிறது. இந்த நிலையில் விண் துகள்கள் ஒவ்வொன்றும் சுதந்திரமாக தனித்தனியே இயங்கும், இந்த நிலையைத் தான் ஆகாசம் என்றும் விண் என்றும் குறிப்பிடுகிறோம்.
 
தொடர்ந்து வரும் சுத்தவெளியின் அழுத்தத்தால், விண்ணின் தற்சுழற்சி வேகம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே இருக்கும், ஏனென்றால் இது வரை ஒரு புள்ளியில் குவிந்த மொத்த ஆற்றல்தான் விண்ணாக சுழன்றது, மேலும் மேலும் வந்து கொண்டே இருக்கும் சுத்தவெளியின் அழுத்தம், இது வரை குவிந்த அந்த ஆற்றலை கரைக்கிறது. தள்ளும் சக்தியான விரிவலைகளை விண்ணின் கரைசல் என்று கூட கூறலாம்.
 
இவ்வாறு தள்ளும் விசை குறைய குறைய, இது போன்றே வெவ்வேறு காலங்களில் உருவான மற்ற விண் துகள்கள் நெருங்கி வந்து இயங்க ஏதுவான சூழ்நிலை ஏற்ப்படும். ஏனென்றால், சுத்தவெளியின் சூழ்ந்தழுத்தும் ஆற்றல் எல்லா விண் துகளையும் நெருங்கி வர செய்கிறது, ஆனால் விண்ணின் தள்ளும் விசை மற்ற விண் துகளை நெருங்க விடாமல் தள்ளுகிறது. இந்த இருக்க ஆற்றலுக்கும் தள்ளும் ஆற்றலுக்கும் உள்ள வித்தியாசம் தான் இரண்டு விண் துகள்களுக்கு இடையில் உள்ள தூரத்தை நிர்ணயிக்கிறது.

 இருக்க ஆற்றல் எப்பொழுதும் ஒரே அளவிலே இருக்கும், ஆனால் தள்ளும் விசை விண்ணின் வயதிற்கு ஏற்றார் போல் அமையும். வெவ்வேறு காலங்களில் உருவான விண் துகள்களுக்கு ஒரே அளவான தற்சுழற்சி வேகம் இருக்காது, எந்த ஒன்று அண்மையில் உருவானதோ அதற்க்கு தற்சுழற்சி வேகம் மற்ற விண் துகளை விட அதிகமாக இருக்கும். வயதில் மூத்த விண் துகளுக்கு தற்சுழற்சி வேகம் குறைவாக இருக்கும்.

இவ்வாறு வெவ்வேறு தற்சுழற்சி கொண்ட விண் துகளை சுத்தவெளி சூழ்ந்தழுத்தும் பொழுது, தற்சுழற்சி அதிகம் கொண்ட விண் துகள் தற்சுழற்சி குறைவான விண் துகளை சுற்றிவரும் நிலை உருவாகும். இந்த விண் துகள் தொகுப்பைத்தான் அறிவியலாளர்கள் அணு (Atom) என்று அழைக்கின்றனர்.
 
சுற்றிவரும் விண் துகளை எலெக்ட்ரான் (Electron)”  என்றும், நடுவில் உள்ள வயதான விண் துகளை ப்ரோடான் (Proton)”  என்றும் அழைக்கிறோம். இந்த ப்ரோடான் துகளுக்கு மேலும் வயது அதிகம் ஆகும் பொழுது, அதன் தற்சுழற்சி வேகம் மிகவும் குறைந்து நியூட்ரோன் (Neutron)” ஆகிவிடும். எலெக்ட்ரான் துகளும் ஒரு கட்டத்தில் தன் சுழற்சி வேகம் குறையும் பொழுது, ப்ரோடான் துகளாக மாறும். எங்கோ சுற்றிகொண்டிருக்கும் ஒரு விண் துகள் எலெக்ட்ரான் இடத்தை நிரப்பும்.

இவ்வாறு விண் துகள் ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு மாறிக்கொண்டே இருக்கும், அவ்வாறு மாறும் பொழுது, விண் துகளின் கூட்டு இயக்கத்தில் ஏற்படும் வெவ்வேறு திணிவு நிலைகளை காற்று, நெருப்பு, நீர், நிலம் என்ற நான்கு பூதங்களாக பிரித்து கூறுகிறோம்.

 
1.       விண் இந்த நிலையில் விண் துகள்கள் அதி வேக தற்சுழற்சி உடையது, ஒவ்வொரு துகளும் சுதந்திரமாக இயங்கும் 

2.       காற்று காற்றில் விண்ணின் தற்சுழற்சி விண் களத்தில்இருந்ததை விட குறைவு, ஆகையால் இங்கு விண் துகள்கள் விண் களத்தில்இருந்ததை விட நெருங்கி இயங்கும்

3.       அழுத்தக்காற்று (நெருப்பு) நெருப்பில் விண்ணின் தற்சுழற்சி காற்றில் இருந்ததை விட குறைவு, ஆகையால் இங்கு விண் துகள்கள் காற்றில் இருந்ததை விட நெருங்கி இயங்கும்

4.       நீர் நீரில் விண்ணின் தற்சுழற்சி நெருப்பில் இருந்ததை விட குறைவு, ஆகையால் இங்கு விண் துகள்கள் நெருப்பில் இருந்ததை விட நெருங்கி இயங்கும்

5.       நிலம் நிலத்தில் விண்ணின் தற்சுழற்சி நீரில் இருந்ததை விட குறைவு, ஆகையால் இங்கு விண் துகள்கள் நீரில் இருந்ததை விட நெருங்கி இயங்கும்

 
நாம் வாழும் இந்த பூமி, பஞ்ச பூதங்களின் கூட்டுக் கலவையே, இந்த பஞ்சபூதங்களையும் ஒன்றாக கலந்து உருட்டிக்கொண்டிருக்கும் அந்த அற்புத சக்தி யார்? சுத்தவெளியின் தன்னிருக்கமே! சுத்தவெளி எல்லா விண் கூட்டங்களையும் சூழ்ந்து அழுத்தும் பொழுது, ஒவ்வொரும் துகளின் தற்சுழற்சி விரைவுக்கு ஏற்றார் போல் துகள்கள் ஒவ்வொன்றாக அடுக்கப்பட்டு ஒரு பெரிய விண் தொகுப்பை உருவாக்கும், இதையே நாம் கோள்கள் என்கின்றோம். 

                                                                                                    தொடரும்............

- இளம்பரிதி

 

 

.